idha padichu tappa irruntha delete pannikatum Smiley pappa
நடுவிரல் காட்டுவதற்கு ஆபாச அர்த்தம் மட்டும் கிடையாது. அதைத் தாண்டிய இன்னும் ஒரு வரலாறு இருக்கின்றது.
இங்கிலாந்தும் பிரான்சும் 1337ஆம் ஆண்டில் இருந்து 1453 ஆம் ஆண்டு வரை கடும் யுத்தத்தில் ஈடுபட்டன. “நூறு ஆண்டு யுத்தம்” என்று இது அழைக்கப்படுகிறது. மன்னர் பரம்பரையினருக்கு இடையில் ஏற்பட்ட நாற்காலிப் போட்டி இந்த யுத்தத்திற்கு காரணமாக அமைந்தது. யுத்தத்தில் இரு தரப்பிற்கும் வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தன.
இங்கிலாந்தின் முக்கிய பலமாக அதனுடைய வில்வீரர்கள் இருந்தனர். அவர்கள் எய்கின்ற அம்புகள் மிக நீண்ட தூரம் பாய்ந்து எதிரிகளை தாக்கின. பிரான்ஸ் நாட்டின் படையினர் இதனால் பல நெருக்கடிகளை சந்தித்தனர். இங்கிலாந்து வில்வீரர்கள் மீது கடும் கோபத்தோடு இருந்து பிரான்ஸ் நாட்டின் படை வீரர்கள், இங்கிலாந்தின் வில்வீரர்கள் உயிரோடு பிடிபட்டால் ஒரு காரியம் செய்தனர். வில்வீரர்களின் நடுவிரலை நறுக்கி தமது கோபத்தை தீர்த்துக் கொண்டனர்.
மிக நீண்ட தூரம் செல்லக் கூடிய அம்பினை ஏவுவதற்கு இங்கிலாந்தின் வில்வீரர்களுக்கு நடுவிரல் முக்கியமானதாக இருந்தது. அதை பிரான்ஸ் நாட்டு வீரர்கள் நறுக்கி, அவர்களை எக் காலத்திலும் வில்லை பயன்படுத்த முடியாதபடி செய்தனர். அத்துடன் இந்தச் செய்தி இங்கிலாந்து வீரர்கள் மத்தியில் பரவி ஒரு உளவியல் தாக்கத்தைக் கொடுக்கும் என்றும் பிரான்ஸ் நாட்டின் படையினர் நம்பினர்.
இந்த நிலையில் 25 ஒக்டோபர் 1415ஆம் ஆண்டில் “அஷின்கோர்ட்” என்னும் இடத்தில் இங்கிலாந்தின் படையினருக்கும் பிரான்ஸின் படையினருக்கும் பெரும் சமர் ஒன்று வெடித்தது. பிரான்ஸ் தரப்பில் ஏறக்குறைய முப்பதினாயிரம் படை வீரர்கள் இருந்தார்கள். ஆனால் இந்த முப்பதினாயிரம் படையினரையும் வெறும் 5900 இங்கிலாந்து வீரர்கள் எதிர்கொண்டனர். இந்த 5900 பேரில் 5000 பேர் வில்வீரர்கள். இவர்கள் தமது சகாக்களின் நடுவிரல்களை நறுக்கிய பிரான்ஸ் படையினரை எதிர்கொள்ளத் தயாரானர்கள்.
சமர் தொடங்கியது. இங்கிலாந்து வீரர்களின் அம்புகளை தாண்டி பிரான்ஸ் படையினரால் முன்னேற முடியவில்லை. அந்தச் சமரில் ஒவ்வொரு இங்கிலாந்து வில்வீரனும் ஒரு நிமிடத்தில் பத்து அம்புகளை ஏவினான் என்று சொல்வார்கள். பிரான்ஸ் படை பேரழிவைச் சந்தித்தது. பத்தாயிரம் வரையான பிரான்ஸ் படையினர் கொல்லப்பட்டனர். 1500 பிரான்ஸ் படையினர் உயிரோடு பிடிக்கப்பட்டனர். இங்கிலாந்து தரப்பில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டனர். 112 போர் வீரர்கள் மாத்திரமே தமது தரப்பில் பலியானதாக இங்கிலாந்து கூறியது.
இங்கிலாந்தின் புகழ் பெற்ற சமர்களில் இதுவும் ஒன்று. குறைந்த வீரர்களோடு அதிகமான வீரர்களை கொண்ட படையை வென்ற உலகின் போர்களில் இது முக்கியமானது.
பிடிபட்ட இங்கிலாந்தின் வில்வீரர்களின் நடுவிரலை நறுக்கி ஒரு உளவியல் போரை நடத்திய பிரான்ஸிற்கு இங்கிலாந்தின் வில்வீரர்கள் “அஷின்கோர்ட்” சமரில் தகுந்த பாடம் புகட்டினர். இதன் பிறகு இங்கிலாந்து வீரர்கள் பிரான்ஸ் வீரர்களைக் காணும் நேரங்களில் நடு விரலை உயர்த்திக் காட்டத் தொடங்கினர். இதனுடைய அர்த்தம் “நாம் வீழ்ந்து விடவில்லை, தோற்றுப் போகவில்லை, உங்களால் நறுக்கப்பட்ட விரல்கள் இங்கே இருக்கின்றன, பலமாக இருக்கின்றன, இவைகள் உங்களை வெற்றி கொள்ளும்”. இப்படி இங்கிலாந்து வீரர்களின் பலத்தை, வீரத்தை, உறுதியை இந்த நடுவிரல் சுட்டி நின்றது.
இப்படி ஒரு வரலாறும் இந்த நடுவிரல் காட்டுவதற்கு இருக்கிறது.