ஒரு இளம்பெண் வீதியில் எண்ணெய் விற்றுக்கொண்டு போகிறாள், எதிரே வருகிறான் அந்த நாட்டு அரசன், அவனும் இளைஞன், அவன் அவளிடம் ஒரு விடுகதையை வேடிக்கையாக கூறுகிறான், அவளும் சளைத்தவளில்லை பதிலுக்கு அவளும் ராஜாவுக்கு ஒரு விடுகதை போட்டு மிரட்டுகிறாள், அந்த விடுகதைகள் இரண்டும் என்ன என்று தெரிந்து கொள்ள கட்டுரையை படியுங்கள், காரணம் அந்த இரண்டு விடுகதைகளும் எனது கட்டுரையோடு தொடர்புடையவை.
அரசன் விடுத்த விடுகதை இதுதான்,
‘எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த
எண்ணெய் வாணியப் பெண்ணே
எள்ளிலே சிறியஇலை என்ன இலை ?
வாணியப்பெண் அரசனுக்கு விடுத்த விடுகதை.
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த
பூலோகம் ஆளும் ராசாவே
பூவிலே ஐந்துவிதமான பூ
என்ன பூ ?
இரண்டுக்கும் விடை ; 1. விடத்தேர் இலை 2. விடத்தேர் பூ
விடத்தேர் மரத்தின் பூக்கள் முதலில் பச்சை நிறமாக அரும்பி, பின் மஞ்சளாக குங்கும நிறமாக, பின் இளம் குங்கும நிறமாக கடைசியில் வெள்ளை நிறமாக மாறுவதால் அதனை என ஐந்து விதமான பூ என்றாள் அந்த வாணியப்பெண்.
‘விடத்தலை என்னும் மருத்துவ மரம்’
வேறு தமிழ் பெயர்கள்:
- ஆனைத்தேர்
- வரித்துலா
- வெடுத்தலாம்
- வீரத்தரு
- விடத்தேரை
- பொதுப்பெயர் : சிக்கிள் பாபுல் ஆஷி பாபுல் (SICKLE BUSH ASHY BABOOL)
- தாவரவியல் பெயர்: டைக்ரோஸ்டேகிஸ் சினெரியா (DICHROSTACHYS CINEREA)
- தாவரக்குடும்பம் : மைமொசியேசி (MIMOSACEAE)