சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் திரு டி.ஆர்.சுந்தரம் அவர்கள் பிறந்த தினம் இன்று. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபரான டி.ஆர்.சுந்தரம், சேலம் மாவட்டம், திருச்செங்கோட்டில் 1907 சூலை 16 ஆம் தியதி பிறந்தார். இவருடைய தந்தை நூற்பாலைகளில் இருந்து நூலை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்த வி.வி.சி. ராமலிங்க முதலியார் ஆவார். தாயார் பெயர் கணபதி அம்மாள். இவர்களுக்கு ஐந்தாவது மகனாக டி.ஆர்.சுந்தரம் பிறந்தார். தனது தொடக்கக் கல்வியை சேலத்தில் கற்ற சுந்தரம், சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்றார். அதன் பிறகு சுந்தரம் இங்கிலாந்து சென்றார். ஜவுளித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். நூல்களுக்கு வண்ணம் சேர்க்கும் தொழில் நுட்பத்தை கற்றறிந்தார். அங்கு படித்த போது லண்டனில் டி.ஆர்.சுந்தரத்துக்கும், 'கிளாடிஸ்' என்ற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ஜவுளித் தொழிலில் உயர் படிப்பு படித்திருந்த சுந்தரத்துக்கு, தனது குடும்பத் தொழிலின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. திரைப்படத் துறை இவரது கவனத்தை ஈர்த்தது. இந்தத் துறையில் காலடி வைக்க ஒரு துணை வேண்டியிருந்தது. லண்டனில் இருந்து அவர் சேலம் திரும்பியபோது (1933_ல்) சேலத்தில் "ஏஞ்சல் பிலிம்ஸ்" என்ற நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. திரைப்படத் தொழிலில் ஆர்வம் கொண்ட டி.ஆர்.சுந்தரம், ஏஞ்சல் பிலிம்ஸ் அதிபர்களான வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து திரைப்படங்கள் தயாரித்தார். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான 'திரௌபதி வஸ்திராபரணம்'(1934), 'துருவன்'(1935), 'நல்ல தங்காள்'(1935) ஆகிய படங்களில் பணி புரிந்தார். அக்காலத்தில் தமிழ்ப் படங்களுக்கு மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. டி.ஆர். சுந்தரம் குழுவினரும் கொல்கத்தா நகரம் சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள். இவ்விரண்டு படங்களும் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்தன. ஒவ்வொரு முறையும் கொல்கத்தா செல்ல வேண்டுமா என நினைத்த சுந்தரம், சேலத்தில் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க எண்ணினார். சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தை சுந்தரம் வாங்கினார். வளாகத்தினுள் நுழைந்தால், அங்கேயே முழுப்படத்தையும் தயாரிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் இருக்கவேண்டும்" என்று நினைத்தார். படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தை போட்டுப்பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935 இல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" நிறுவனம் உருவானது... மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் (Modern Theaters Ltd) 1935ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) துவக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக சேலம் போன்ற வெளி நகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது . மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக் கூடம் ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே..