பவள விழா கண்டு, நூறாண்டு வரலாற்றை தொடவிருக்கும் தமிழ் சினிமாவும், காதலை கொண்டாடி தீர்த்த பின்னும், காதல் இன்னும் மிச்சமிருக்கிறது.
பேசியே காதல் (மௌன ராகம் கார்த்திக்), பேசாமல் காதல் (சொல்லாமலே லிவிங்ஸ்டன்), சொல்லாமல் காதல் (இதயம் முரளி), பாடியே காதல் (மைக் மோகன், புதுப்புது அர்த்தங்கள் ரஹ்மான்), ஆடியே காதல் (கரகாட்டக்காரன்), தொடாமல் காதல் (டி.ராஜேந்தர்), பதிவுத் திருமணக் காதல் (அலைபாயுதே) என, பல்வேறு பரிமாணங்களில் சொல்லப்பட்ட தமிழ் சினிமாவில், ‘பார்க்காமலேயே காதல்’ என்கிற புதிய ட்ரெண்டை உருவாக்கிய படம் ‘காதல் கோட்டை’…
கால் நூற்றாண்டு கடந்தும், தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் “காதல் கோட்டை” 1996-ம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வெளியானது…
1996-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் ‘சிறந்த படமாக’ தேர்வு செய்யப்பட்ட காதல் கோட்டை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது.
இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும், தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த காதல் திரைப்படங்களின் பட்டியலில், அகத்தியனின் காதல் கோட்டை, எப்போதும் அழியாத கோட்டையாகவே இருக்கும்.