AgaraMudhalvan
Epic Legend
நானே என்னை நேசிக்கிறேன்
மேலும் மேலும் உன் அன்பை
யாசகமாய்ப் பெறுவதில்
விருப்பமில்லை
ஒரு நிலவு தானாக உதிப்பதைப் போல
ஒரு மலர் தானாக மலர்வதைப் போல
ஒரு மழை தானாக பொழிவதைப் போல
உன் அன்பு இருக்கவில்லை
பிச்சை எடுப்பவளின் பாத்திரத்தில்
விழும் கருணையைப் போன்றிருக்கும்
அன்பில் ஒரு அர்த்தமும் இல்லை
நீந்தும்
ஒரு மீனின் சுகத்தைத் தரும்
எதிர்ப்பார்ப்பற்ற நீரோடையின்
அன்பு எங்கிருக்கிறதென்று
தெரியவில்லை
செருப்பின்றி வெயிலில் நடப்பவனள் மரம் தரும் அன்பின் நிழலில் இளைப்பாறுதல்
எங்கிருக்கிறதென்று தெரியவில்லை.
புழுங்குபவளின் வெக்கையை விரட்டும் குளிர் தென்றலின் அன்பு எங்கிருக்கிறதென்று தெரியவில்லை
பறவைக்கு கூடு கட்ட இடம் தரும்
மரத்தின் அன்பு எங்கிருக்கிறதென்று
தெரியவில்லை
பொய்மையின் வடிவிலிருக்கும்
அன்பைக் காணுதலில்
உயிர் தன்னை மாய்த்து கொள்ள
விழைகிறது
நான் என்னை
நேசிப்பதற்கு சென்றுவிட்டேன்.